அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஒருவருக்குச் சொந்தமான “ஜன் தன்” வங்கிக் கணக்கில், ரூ.98,05,95,12,231 கோடி நவம்பர் 4 -ஆம் தேதி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங். கார் ஓட்டுநரான இவர், பிரதான் மந்திரி “ஜன் தன் யோஜனா” திட்டத்தின் கீழ், சில மாதங்களுக்கு முன்பாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா வங்கி கிளையில் சேமிப்புக் கணக்கை தொடங்கி நிர்வகித்து வந்துள்ளார். அவரது வங்கி கணக்கில் 3 ஆயிரம் ரூபாய் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் உயர் மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், ஏராளமானோர் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்திவருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, சில நாட்கள் முன்பாக, திடீரென பல்வீந்தர் சிங்கின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் ரூ.98,05,95,12,231 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அவருக்கு தெரியவந்தது.

இதைக் கண்டதும் ஆனந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடிய பல்வீந்தர் சிங், ஒரேநாளில் கோடீஸ்வரனாக மாறியதாகப் பெருமிதம் கொண்டார். இருந்தாலும், ஒரு சந்தேகத்தின்பேரில், தனது வங்கிக்குச் சென்று, இதுபற்றி விளக்கம் கேட்டுள்ளார்.

அதற்கும் முன்பாக, அந்த வங்கியின் மேலாளர் பல்வீந்தர் சிங்குக்குப் புதிய பாஸ்புக் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். அதை வாங்கிப் பார்த்த பல்வீந்தர் அதிர்ச்சியடைந்தார். காரணம், ரூ.98,05,95,12,231 கோடியை காணவில்லை. வெறும் ரூ.200 மட்டுமே அவரது சேமிப்புக் கணக்கில் உள்ளதாக பதிவிடப்பட்டிருந்தது. இதுகுறித்து பல்வீந்தர் சிங்கிடம் காரணம் எதுவும் கூறப்படவில்லை.

அதேசமயம், இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா தரப்பில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ”வங்கியின் கணக்கு மேலாளர் சந்தீப் கார்க் தவறுதலாக, மேற்கொண்ட பிழையால் பல்வீந்தர் சிங் சேமிப்புக் கணக்கில் ரூ.98,05,95,12,231 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது பணம் டெபாசிட் தொகை அல்ல. வங்கியின் 11 இலக்க கணக்கு விவர எண். அதை, டெபாசிட் பகுதியில் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த தவறு நீக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய பாஸ் புக் விநியோகிக்கப்பட்டுள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமிர்தசரஸ் துணை காவல் ஆணையர் பூபிந்தர் சிங் ராய் விசாரணை நடத்தி, உறுதி செய்துள்ளார்.

Advertisements