சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு பிரச்சனை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 8ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

பணப்புழக்கம் குறைந்து பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனால் சந்தை பகுதிகள், கடற்கரைகள், பொழுதுபோக்கு இடங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் வெறிச்சோடின.

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் வங்கிகளில் அலைமோதினர்.

இதற்காக, விடுமுறை ஏதுமின்றி தொடர்ச்சியாக, வங்கிகள் இயங்கிவந்தன.

ஏடிஎம்கள் பல இடங்களில் மூடியே கிடக்கின்றன. திறந்திருக்கும் ஏடிஎம்களிலும் பணம் நிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே காலியாகி விடுகிறது. மக்களிடையே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் பல ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

பணத்தட்டுப்பாடு

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்தடுத்து பல்வேறு தட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சில்லறை தட்டுப்பாட்டால் உணவு விடுதிகள், காய்கறி மற்றும் மளிகை கடைகளில் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையில் வங்கிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டதால் பணத்தை எடுக்கவும், டெபாசிட் செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டது.

மீனவர்கள் பாதிப்பு

சில்லறை தட்டுப்பாடு காரணமாக மீன்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் 80 சதவீத படகுகள், மீன் பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் பெரிய அளவில் வருவாய் இழந்துள்ளனர். சில்லறை விற்பனையில் ஈடுபடும் மீனவர்களின் நிலை கடும் சிரமமாக உள்ளது. கடந்த 20 நாட்களில் அவர்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


சில்லறை இல்லையே

ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.10 ஆயிரம் வரை வியாபாரம் நடக்கும். தற்போது சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீன் வாங்க வரும் மக்கள் குறைந்துவிட்டனர். அப்படியே வந்தாலும் பழைய ரூ.500 நோட்டு அல்லது புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை தான் கொண்டு வருகின்றனர். அதை நாங்கள் வாங்குவதில்லை இதனால் தினமும் ரூ.2 ஆயிரத்துக்கு கூட மீன் விற்க முடியவில்லை என்பது மீனவர்களின் கவலை.

சிறு கடைகள் மூடல்

பணத்தட்டுப்பாடு காரணமாக சிறு கடைகள், காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு சில கடைகளிலும் 2000 ரூபாய் நோட்டுடன் மக்கள் வருவதால் சில்லறை தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். பலர் கடைகளை மூடிவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கோயம்பேடு சந்தையில் தெரிவித்தனர்.

வங்கிகள் திறப்பு

நவம்பர் 26,27 சனி மற்றும் ஞாயிறன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 2 நாள் விடுமுறை முடிந்து, இன்று நாடு முழுவதும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இயங்க தொடங்கியுள்ளன. இன்று எதிர்கட்சியினர் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தினாலும் வங்கிகள் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

புதிய 500 ரூபாய் நோட்டுக்கள்

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விநியோகிப்பதற்காக, 14 டன் மதிப்பிலான புதிய ரூ.500 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றை, சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலமாக, கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, பொதுமக்களிடையே நிலவி வந்த சில்லறை தட்டுப்பாடு இந்த வாரத்திற்குள் ஓரளவு சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்சினை எப்போது தீரும்

ஏடிஎம் இயந்திரங்களிலும் புதிய ரூபாய் நோட்டுகள் பொருத்தப்படும் என்பதால், பொதுமக்களுக்கு ஓரளவு பண தட்டுப்பாடு குறையும் எனவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு இன்னும் முழுமையாக வந்து சேராததால், பணத்தட்டுப்பாடு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. பிரச்சனை எப்போது தீரும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisements